இக்கட்டுரை நான்கு பகுதிகளைக் கொண்டது.
விவாதிக்கப்படவுள்ள தலைப்புகள்
பகுதி 1
- நீரிழிவு நோயின் வரையறை
- இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் ஹார்மோன் தலையீட்டின் பங்கு
- வகைப்பாடு மற்றும் வகைகள்
- பல்வேறு வகையான நோய்க்குறியியல் அல்லது இரண்டாம் வகை டயாபடிஸ் மெலிட்டஸ் (Type II DM) இன் ஆபத்துக் காரணி
- தொற்றுநோயியல் (சுருக்கமாக)
- நோய் கண்டறிதல் மற்றும் வெளியிடல்
- இன்சுலின் உயிரியக்கவியல், சுரப்பு மற்றும் செயல்
- நோயாளியை அணுகுதல்
- வரலாறு மற்றும் உடல் பரிசோதனை
- ஆய்வக மதிப்பீடு
- மேலாண்மை மற்றும் சிகிச்சைகள் பகுதி 1
- பருவ வயது கடந்தவருக்கான டயாபடிஸ் மெலிட்டஸ் (DM) உடைய சிகிச்சை இலக்குகள்
- விரிவான நீரிழிவு மேலாண்மை கவனிப்பின் தற்போதைய அம்சங்கள்
- நீரிழிவுக் கல்வி
- உளவியல் சமூக அம்சங்கள்
- டயாபடிஸ் மெலிட்டஸ் (DM) இல் ஊட்டச்சத்து
- தவிர்க்க வேண்டிய உணவுகள் Avoid Foods for Diabetes
நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
நீரிழிவு நோயின் தாக்கத்தினால், உலகளவில் கிட்டத்தட்ட 5-6 % மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். உலகளவில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் இறப்புகள் நேரடியாக நீரிழிவு நோயால் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக மிகுந்து வருகிறது.
நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோயாகும், இது இரத்த குளுக்கோஸின் (இரத்தச் சர்க்கரை) உயர்ந்த அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது, இது காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
டயாபடிஸ் இன்சிபிடஸ் (Diabetes Insipidus)
டயாபடிஸ் நோயின் மற்றொறு வகையான டயாபடிஸ் இன்சிபிடஸ் (Diabetes Insipidus) என்பது, மைய நரம்பு மண்டலத்தில் (Central Nervous System), குறிப்பாக ஹைப்போதாலமசில் ஏற்படும் மாறுபாட்டினால் எற்படும் மிகை சிறுநீர்ப் போக்கு நிலையாகும். நாம் இங்கு காண இருப்பது டயாபடிஸ் மெலிட்டஸ் (Diabetes Mellitus) எனும் வகையைக் குறித்தேயாகும்.
டயாபடிஸ் மெலிட்டஸ் (Diabetes Mellitus)
இரத்தத்தில் சர்க்கரையின் மாறுபாட்டினால், குறை இரத்தசர்க்கரை அளவு (Hypoglycemia) மற்றும் மிகை இரத்தச் சர்க்கரை அளவு (Hyperglycemia) எனும் நோய்கள் உண்டாகின்றன.
ஹைபர்கிளைசீமியா எனப்படும் மிகை இரத்தச் சர்க்கரை அளவு நோய் இரு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று இன்சுலின் குறைபாடு மற்றும் அதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி இருத்தல். மற்றொன்று உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலையினால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி இருத்தல். இதுவே வகை - 1 நீரிழிவு நோய் மற்றும் வகை - 2 நீரிழிவு நோய் எனப்படுகிறது.
இவ்விரண்டு வகைகளுள் மிகவும் பொதுவானது வகை - 2 நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக பெரியவர்களில், கணையம், போதுமான அளவு இன்சுலினை சுரந்த போதிலும், அவர்களின் உடல் இன்சுலினை எதிர்க்கும் நிலையில் உள்ள போது ஏற்படுகிறது. வகை - 1 நீரிழிவு நோய் இளம் வயதினரில், கணையம், போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில், அனைத்து வருமான நிலைகளில் உள்ள நாடுகளிலும், வகை - 2 நீரிழிவு நோயின் பாதிப்பு வியத்தகு அளவில் மிகுந்துள்ளது.
நீரிழிவு நோயின் சிக்கல்களால் பலர் இறக்கின்றனர். இந் நோயின்விளைவாக ஏற்படும் இணை நோய்களால், எடுத்துக்காட்டாக மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்ற பல நோய்களாலும் பலர் இறக்கின்றனர். நீரிழிவு நோய் என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. மாறாக, இது பல நோய்களின் தொகுப்பாகும்.
வகை 1 நீரிழிவு
வகை 1 நீரிழிவு நோயை ஒருபுறமும், வகை 2 நீரிழிவு நோயை மறுபுறமும் எடுத்துக் கொண்டால், இதன் இடையில் பல நிலைகள் காணப்படுகின்றன. வகை - 1 நீரிழிவு நோய் இளம் வயதினரில், தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறினால் (autoimmune disorder), கணையம், போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. பொதுவாக நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் உடலைத் தாக்கும் பொருட்களை அழித்து நம்மைக் காக்கிறது. இச் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறினால், நமது நோய் எதிர்ப்புச் சக்தியே நமது உடலை எதிர்க்கும் நிலையே தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறு (autoimmune disorder) என அழைக்கப்படுகிறது. இவ்விதமான தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறினால், கணையம், இன்சுலின் உற்பத்தி செய்யும் ஆற்றலை இழக்கிறது. இதன் விளைவாக வகை - 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
வகை - 2 நீரிழிவு
வகை - 2 நீரிழிவு நோயானது, பெரியவர்களில், கணையம், போதுமான அளவு இன்சுலினை சுரந்த போதிலும், அவர்களின் உடல் இன்சுலினை எதிர்க்கும் நிலையில் உள்ளதால், சுரக்கப்பட்ட இன்சுலின் பயனற்றுப் போய், வகை - 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 95 விழுக்காட்டினர், வகை - 2 நீரிழிவு நோயைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
மிகை இரத்தச் சர்க்கரை நோயின் பல்வேறு நிலைகள்
வகை - 1 நீரிழிவு பொதுவாக இளம் வயதினரிடமும், வகை - 2 நீரிழிவு வயதானவர்களிடமும் காணப்படுகிறது.
சில காரணங்களால், மிகச் சில இளம் வயதினரிடத்தில் வகை - 2 நீரிழிவை ஒத்த நிலையும், அதே போல், மிகச் சில வயதானவர்களிடத்தில் வகை-1 நீரிழிவை ஒத்த நிலையும் மாறிக் காணப்படுகிறது.
LATENT AUTOIMMUNE DIABETES OF ADULTS (LADA)
வயதானவர்களிடம் காணப்படும் வகை 1 நீரிழிவு ஒத்த நிலை LATENT AUTOIMMUNE DIABETES OF ADULTS (LADA) என அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு நிலைகளிலும் இன்சுலின் சுரப்புக் குறைபாட்டினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடுகிறது. ஆயினும் வகை 1 நீரிழிவு நோயானது இளம் வயதினரிடமும் LADA வகை நோயானது வயதானவர்களிடம் காணப்படுகிறது.
MATURITY ONSET DIABETES OF YOUNG PEOPLE (MODY)
மேற்கூறிய நிலையைப் போலவே இளம் வயதினரிடம் காணப்படும், வகை - 2 நீரிழிவு MATURITY ONSET DIABETES OF YOUNG PEOPLE (MODY) என அழைக்கப்படுகிறது. வகை - 2 நீரிழிவிற்கும், MODY வகை நீரிழிவிற்கும் ஒத்த பண்பு இன்சுலின் செயல்பாடின் குறைபாடாகும். ஆயினும் வகை 2 நீரிழிவு வயதானவர்களிடையே மட்டும் காணப்படுகிறது. மாறாக MODY வகை நீரிழிவு நோய் இளம் வயதினரிடையே காணப்படுகிறது.
பேறுகால நீரிழிவு (GESTATIONAL DIABETES)
இவ்வகை நீரழிவு பேறுகாலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படுவதாகும். இதைப் பற்றிய விரிவான விளக்கம் பின்வரும் பகுதியில் காணலாம்.
இரண்டாம் நிலை நீரிழிவு (SECONDARY DIABETES)
இவ்வகை நீரிழிவு உடலில் தோன்றும் மற்ற மாறுபாட்டினால், எடுத்துக்காட்டாக நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டின்மையால் ஏற்படும் கஷிங் குறைபாட்டினால் (Cushing Syndrome) இரத்தத்தில் கார்டிசால் ஹார்மோன்கள் எனப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் நாட்பட்ட நிலையில் மிகுந்து காணப்படுவதின் விளைவாக அல்லது இதய நோய்கள் மற்றும் இரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளும் தையசைடு (Thiazide), ப்ரொபனால் (Propanol) போன்ற மருந்துகள் பீட்டா தடுப்பான்களாகச் (Beta Blockers) செயல்பட்டு, அதன் விளைவாகவும் இரத்தத்தில் ஏற்படும் மிகை சர்க்கரை அளவினால் உண்டாவதாகும்.
இவ்வாறாக, மிகை இரத்தச் சர்க்கரை அளவு நோயை, இன்சுலின் சுரப்புக் குறைபாட்டு நிலை மற்றும் இன்சுலின் செயல்பாட்டுக் குறைபாட்டு நிலைகளுக்கிடையே அமைந்திருக்கும், பல்வேறு நிலைகள் எனும் பலவிதமான மரணக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு கொடூரமான பாசக்கயிறு எனக் கூறலாம்.
பெருநாள நோய்கள் மற்றும் சிறு நாள நோய்கள்
மாவு பொருட்களாகிய கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்தையும், புரதங்களின் வளர்சிதை மாற்றத்தையும், கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றங்களையும் நீரிழிவு நோய் பாதிக்கின்றது. இவ் வளர்சிதை மாற்றங்களைப் பின் வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம். இதனுடன் இந்நோய், இரத்த நாளங்களையும் பாதிப்படையச் செய்கின்றது.
நீரிழிவு நோயை, சிலர், நாள நோய்கள்(Vascular Disease) எனக் கூறுவதுண்டு. நீரிழிவு நோய் பெரு நாளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி பெருநாள நோயை(Macro Vascular Disease) உண்டாக்குகிறது. சில நேரங்களில் சிறுநாளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி சிறு நாள நோயை (Micro Vascular Disease) உண்டாக்குவதும் உண்டு. இவ்விரண்டு நிலையிலும் அதன் செயல்பாடுகள் மாறுபட்டுள்ளன.
பெருநாள நோய்கள் (Macro Vascular Diseases)
நீரிழிவு நோயின் தாக்கத்தினால், நெகிழ்வுத் தன்மையுடைய பெருநாளங்கள் பாதிப்படைவதினால் பெருநாள் நோய்கள் தோன்றுகின்றன. பெருநாள நோய்கள் நீரிழிவு நோயின் தாக்கத்தினாலும் மற்ற காரணங்களினாலும் ஏற்படுகின்றன. மிகை இரத்த அழுத்தம், மிகை இரத்தக் கொழுப்பு, முதுமை போன்ற காரணங்களினாலும் இந்நோய் தாக்குகிறது. ஆயினும் இது போன்ற வேறு காரணங்களால் இந்நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இவர்களோடு ஒப்பிடும் போது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிக விரைவாகவும், முன்னதாகவும், மிகப் பரவலாகவும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் கீழ்காணும் பெருநாள நோய்கள் ஏற்படுகின்றன :
1. இதய முதன்மைத் தமனி நோய் (Coronary Artery Diseases)
Stable angina எனும் நிலையான இதய வலி
Unstable Angina எனும் நிலையற்ற இதய வலி
Myocardial Infarction எனும் இதயத்தசைப் பிடிப்பு
Sudden Cardiac Death எனும் திடீர் இதய மரணம்
2. பெருமூளை நாள விபத்துகள் (Cerebrovascular Accidents)
நீரிழிவு நோயினால் கீழ்கண்டப் பெருமூளை நாளச் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
Stenotic CVA - இதயம் அல்லது மைய நரம்பு மண்டலத்தைச் சார்ந்தப் பெரு நாள அடைப்பு ஒரே இடத்தில் நிலையாக இருப்பதன் காரணமாக, பெரு நாளங்களின் விட்டம் குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுதலினால் மைய நரம்பு மண்டலத்தின் குறிபிட்டப் பகுதிக்கு இரத்தம் சென்று சேராமை.
Thrombotic CVA - மைய நரம்பு மண்டலத்தைச் சார்ந்தப் பெரு நாள அடைப்பின் மேற்புறம், தட்டணுக்கள் மற்றும் பைப்ரின்களின் படிமத்தினால், இரத்தம் கட்டிக்கொண்டு இரத்த ஓட்டத்தை மேலும் தீவிரமாகத் தடுத்து உடலின் குறிபிட்டப் பகுதிக்கு இரத்தம் சென்று சேராமை.
Embolic CVA - இவ்வகையானது, இரத்த நாளங்கள் அல்லது கழுத்து இரத்த நாளங்களில் மேற்கூறிய த்ரோம்போடிக் எனப்படும் இதய நாள உட்புறக் கட்டியானது பெயர்ந்து இரத்த நாளங்கள் வழியே மைய நரம்பு மண்டலத்தைச் சென்றடைந்து அங்கு அடைத்துக் கொள்வதாகும். இவ்வடைப்பானது எங்கு எற்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரத்தன்மை மாறுபடும்.
Hemorrhagic CVA - பெருநாளச் சுவர் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. உள் அடுக்கு இன்டிமா (Intima) என்றும், நடுத்தர அடுக்கு மீடியா (Media) என்றும், வெளிப்புற அடுக்கு அட்வென்டீஷியா (Adventitia) என்றும் அழைக்கப்படுகிறது. பெருமூளை நாளங்களில் தீவிர அடைப்பு ஏற்பட்டு பெரு நாளச் சுவரின் மூன்று அடுக்குகளையும் பாதிப்படையச் செய்து அவ்வடுக்குகளில் பிளவு ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்படுதல்.
மேலே குறிப்பிட்ட பெருமூளை நாள விபத்து வகைகளில், த்ரோம்போடிக் மற்றும் எம்போலிக் வகைகளை, தீவிரமான மற்றும் இயல்பான இரத்த முடக்க பெருமூளை நாள விபத்துகள் (Ischemic CVA) எனலாம்.
3. புறப்பகுதி பெருநாள நோய்கள் (Peripheral Vessel Disease)
நீரிழிவு நோயினால் ஏற்படும் கொடூரமான பாதிப்புகளில் இதுவும் ஒன்று. இதனால் இடுப்புக்குக் கீழ் பகுதியில், குறிப்பாக கால் மற்றும் பாதங்களின் பெருநாளங்களில் மேற்குறிப்பிட்ட வகையில் இரத்த அடைப்புகள் ஏற்பட்டு, அதனால் கால் மற்றும் பாதங்களின் தசைகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாததினால், அத்தசைகள் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக பலச் சிக்கல்கள் ஏற்படலாம். இதன் விளைவாகவே, கால் மற்றும் பாதங்களின் ஒரு பகுதி அல்லது பெரும் பகுதியை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
4. நீரிழிவுச் சிறுநீரக பெருநாள நோய் (Diabetic Renal Vascular Disease)
சிறுநீரகத்திற்குச் செல்லும் பெருநாளங்களில் இதேபோன்ற அடைப்புகள் ஏற்படுவதின் விளைவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இன்ன பிற பாதிப்புகளும் பின்விளைவுகளையும் இந்நோய் ஏற்படுத்துகிறது. பொதுவாக சிறுநீரகத்தில் க்ளோமருலசின் சிறு நாளங்களிலேயே பாதிப்பு காணப்பட்டாலும், சிறுநீரகத் தமனியிலும் இது போன்ற அடைப்புகள் ஏற்படுவதுண்டு.
சிறு நாள நோய்கள் (Micro Vascular Diseases)
பெரு நாள நோய்களைப் போலவே, சிறு நாளங்களிலும் நீரிழிவு நோயினால் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், சிறுநாள நோய்கள், நீரிழிவு நோயினால் மட்டுமே எற்படுகின்றன. பெருநாள நோய்கள் நீரிழிவு காரணமாகவும் ஏற்படலாம் மற்ற காரணங்களினாலும் ஏற்படலாம். ஆனால் சிறு நாள நோய்கள் நீரிழிவினால் மட்டுமே ஏற்படும்.
உடலில் உள்ள திசுக்களுக்கு, குளுக்கோஸ் முதன்மை எரிபொருளாக உள்ளது. குளுக்கோஸ் மட்டுமே மூளைக்கான ஆற்றலின் அடிப்படை ஆகும். இயல்பான மூளைச் செயல்பாட்டை உறுதி செய்ய, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நிலையாகப் பராமரிக்க வேண்டி உள்ளது.
செல்கள் பயன்படுத்தும் ஆற்றலின் பெரும்பகுதி குளுக்கோஸிலிருந்து வருகிறது. · குளுக்கோஸை ஆற்றலாக மாற்றப் பயன்படுத்தப்படும் முதல் படிநிலை கிளைகோலிசிஸ் எனப்படுகிறது.
கிளைகோலிசிஸின் 3 முக்கிய படிநிலைகள்:
புரதம் மற்றும் உயிரணுக்களில் குளுக்கோஸ் பிணைக்கப்பட்டு புரதம் உறுமாற்றமடைதல்.
ஆறு கார்பன் பிரக்டோஸின் பிளவு மூலம், மாற்றத்தக்க மூன்று கார்பன் மூலக்கூறுகள் உருவாக்கப்படுதல்
ஏடிபி எனும் ஆற்றல் உருவாக்கப்படுதல்.
இவ்வாறாக கிளைகோலிஸ், ஆற்றல் உருவாக்கலில் முதன்மைப் பங்காற்றுகிறது.
நீரிழிவு நோயினால் ஏற்படும் பெருநாள நோய்கள், சிறுநாள நோய்கள், பெருந்தமனி தடிப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், அல்சைமர் நோய் போன்ற பல நோய்கள் மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் சில நோய்கள் உண்டாகுதலில், கிளைகோலிஸ் ஒரு உயிர் குறிப்பானாக (Bio-Marker) செயலாற்றுகிறது. புரத அமைப்புகள் மாற்றப்படுவதின் விளைவாக, ரத்த நாளங்களின் அடித்தள சவ்வு தடிமனாகி விடுகிறது.
குளுக்கோஸ் மற்றும் அதன் விளைப்பொருட்கள் அடித்தள சவ்வில் இருக்கும் புரதத்துடன் நொதியற்ற பிணைப்பை உண்டாக்குவதன் விளைவாக, புரதங்கள் மாற்றப்படுகின்றன. இவ்விளைவினால் அடித்தள சவ்வு தடிமனாவதோடு மட்டுமல்லாமல், விரிசலுற்று கசியத் துவங்குகிறது.
இதுபோன்று மாற்றியமைக்கப்பட்ட புரதம், மேம்பட்ட கிளைகேஷன் இறுதி விளைப்பொருட்கள் (Advanced Glycation End Products/AGEs) என்று அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இந்த மாற்றமானது மீளக்கூடியதாக (Reversible) உள்ளது. காலப்போக்கில் இம்மாற்றங்கள் மீள முடியாததாக மற்றும் மீளாத்தன்மையுடையதாகவும் நிலையானதாகவும் (Irreversible and Stable) மாறிவிடுகின்றன.
சிறுநாள நோய்களில் முதன்மையானவை கீழே தரப்பட்டுள்ளன :
நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy)
நீரிழிவு நோயினால் தோன்றும் சிக்கல்களில், நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) கொடியதாகும். இறுதியில் இந்நோய் குருட்டுத் தன்மையை உண்டாக்கும்.
இந் நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது:
1. அடிப்படையானது 2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy) 3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative) 4. பெருக்கம் தொடர்பானது (Proliferative)
விழித்திரையில், அடித்தள சவ்வுகள் தடிமனாகி, அதில் பல நுண்ணிய பிளவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பிளவுகளின் வழியாக கொழுப்புப் புரதங்கள் மற்றும் கொழுப்புப் பொருட்கள் அல்லது புரதங்கள் விழித்திரை நரம்புத் திசுக்களில் கசிந்து அதை சேதப்படுத்துகின்றன. அவை விழித்திரை இரத்தக்கசிவை கூட உருவாக்கலாம். இது போன்ற விழித்திரை இரத்தக் கசிவுகள் நீரிழிவு அல்லாத பிற காரணங்களாலும் உருவாகலாம். விழித்திரை நாளங்கள் மட்டுமே, ஆரோக்கியமான நபரிடம் நாம் நேரடியாகப் பார்க்கக் கூடிய நாளமாகும். நீரிழிவு நோயாளிகளிடையே இவற்றின் இயல்பற்ற நிலையைக் காண முடியும். மற்ற இரத்த நாள நோயைப் போலவே விழித்திரை நோயும் நீரிழிவு நோயாளிகளிடையே மிக விரைவாகப் பரவுகிறது. புது நாளங்கள் விழித்திரையில் உண்டாகின்றன. இது நீரிழிவுப் பெருக்க விழித்திரை நோய் எனப்படுகிறது. இந்நிலையில் இரத்தக் கசிவு மிகையாக ஏற்படுகிறது. இதனால் குருதியில் மட்டுமே இருக்கக் கூடியப் பொருட்கள் கசிந்து விழித்திரையின் நரம்புத்திசுக்களைப் பாதிப்படையச் செய்து பல சிக்கல்களை உண்டாக்குகிறது.
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களில் சிறிய புடைப்புக் காணப்படுகிறது. இதனால் இரத்த நாளங்களில் அழுத்தத்தினால் உடைந்து விழித்திரையின் மேல் குருதி பரவுகிறது. இக்குருதிக் கசிவு விழிப் பின்னறை நீர்மத்திலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீர்மத்தினுள் வளர்ச்சியுறலாம். லேசர் மருத்துவம் வாயிலாக இது சரி செய்யப்படுகிறது.
நீரிழிவுச் சிறுநீரக நோய் (Diabetic Nephropathy)
இந்நோய் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதம், பாதங்களில் வீக்கம் மற்றும் சிறுநீரக நோய்களை ஏற்படுத்துகிறது, இது பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.
இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்ட உங்கள் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில், அதிக உழைப்பின் விளைவாக அவை மோசமடையத் தொடங்குகின்றன. இதன் அறிகுறிகள் வெவ்வேறு நோயாளிகளுக்கு, அதன் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும். முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கினால், நீரிழிவு நெஃப்ரோபதி சிக்கல்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை வாழ்வதைத் தடுக்க எந்த காரணமும் இல்லை.
சிறுநீரகங்களின் சிறுநீரக நுண் துளை பந்துகளில் (Glomerulus) உள்ள நுண் குழல்களில் நாள நோய்கள் ஏற்படுவதின் மூலம் மற்றும் சிறுநீரகங்களில் காணப்படும் நுண்குழல்கள், நுண்துளை பந்து சவ்வு மற்றும் மெசஞ்சியம் செல்களில் கிளைகேஷன் இறுதி பொருட்களின் பெருக்கத்தினாலும் நீரிழிவு சிறுநீரக நோய் தீவிரமடைகிறது. நாள்பட்ட நிலையில் இந்நோய் தொடர்ந்து இருப்பதனால் சிறுநீரக செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் செயலிழக்கப் படுகின்றன.
Diabetic Neuropathy
நிமிர் நிலைக் குருதி அழுத்தம் அல்லது ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் (Orthostatic Hypotension)
ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் எனப்படும் நிமிர்நிலைக் குருதிஅழுத்தம், சிறுநாள நோயின் வகையே ஆகும். ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் அல்லது நிமிர்நிலைக்குறை குருதி அழுத்தம் என்பது நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் இருந்து எழுந்து நிற்கும்போது புவிஈர்ப்பு விசையின் விளைவாக, இரத்தம் நம் உடலின் கீழ்ப் பகுதிக்கு விரைந்து செல்லும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் விரைவாகக் குறையும். இக்குறை இரத்த அழுத்தம் போஸ்டுரல் ஹைபோடென்ஷன் (Postural Hypotension) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயத்தில், பொதுவாக இதனால் தடுமாற்றம் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும். இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு, அனுதாப நரம்பு மண்டலத்தின் துணையோடு, கால்களில் உள்ள தசைகள் மற்றும் சிரைகளின் சுருக்கத்தினால், இரத்தம் மீண்டும் மேலெழுப்பப்பட்டு, திடீர் குறை இரத்த அழுத்தம் உடனடியாக சரி செய்யப்பட்டு விடுகிறது. நீரிழிவு நோயாளிகளின் கால் தசைகள் மற்றும் கால் தசைகளின் பெருநாளங்கள் மேற்கூறிய பாதிப்பினால், செயலற்று, இயல்பாக செயலாற்றும் திறனை இழந்திருப்பதின் விளைவாக, திடீர் குறை இரத்த அழுத்தத்தை சமன் செய்ய இயலாமல், நோயாளிக்குத் தடுமாற்றம் அல்லது மயக்கத்தை ஏற்படுத்திக் கீழே விழச் செய்யும்.
இப்பதிவு தினமும் பரவும்.
Good Sir important information Sir
ReplyDeletei would like to know home or herbal remedial for PCOS, Thyroid and Calcium decifiency problems
ReplyDeleteRegarding PCOD I have already posted a post. Please refer the link given below :
ReplyDeletehttps://siddhamaruththuvar.blogspot.com/p/pcod-polycistic-ovarian-syndrome.html
In case of Thyroid please indicate the thyroid test level, whether it is hypo thyroid or hyperthyroid ?
For Calcium Deficiency and if combined with Hypothyroid problem also, then Pirandai Uppu (Salt of Cissus Quadrangularis) will be the best.
Pirandai Uppu available in shops is not the correct one. If possible prepare yourself or get it from traditional practitioners. will post the preparation method of Pirandai Uppu, if required.