பெருநாள நோய்கள் (Macro Vascular Diseases)
நீரிழிவு நோயின் தாக்கத்தினால், நெகிழ்வுத் தன்மையுடைய பெருநாளங்கள் பாதிப்படைவதினால் பெருநாள் நோய்கள் தோன்றுகின்றன. பெருநாள நோய்கள் நீரிழிவு நோயின் தாக்கத்தினாலும் மற்ற காரணங்களினாலும் ஏற்படுகின்றன. மிகை இரத்த அழுத்தம், மிகை இரத்தக் கொழுப்பு, முதுமை போன்ற காரணங்களினாலும் இந்நோய் தாக்குகிறது. ஆயினும் இது போன்ற வேறு காரணங்களால் இந்நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இவர்களோடு ஒப்பிடும் போது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிக விரைவாகவும், முன்னதாகவும், மிகப் பரவலாகவும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் கீழ்காணும் பெருநாள நோய்கள் ஏற்படுகின்றன :
1. இதய முதன்மைத் தமனி நோய் (Coronary Artery Diseases)
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிக விரைவாக (5-6 ஆண்டுகளிலேயே) இதய நாள அடைப்புகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம். இந்நோயின் தாக்கத்தினால் பின் வரும் சிக்கல்கள் உண்டாகின்றன :
Stable
angina எனும்
நிலையான இதய வலி
Unstable
Angina எனும்
நிலையற்ற இதய வலி
Myocardial
Infarction எனும்
இதயத்தசைப் பிடிப்பு
Sudden Cardiac Death எனும் திடீர் இதய மரணம்
2. பெருமூளை நாள விபத்துகள் (Cerebrovascular Accidents)
நீரிழிவு நோயினால் கீழ்கண்டப் பெருமூளை நாளச் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
Stenotic CVA - இதயம் அல்லது மைய நரம்பு மண்டலத்தைச் சார்ந்தப் பெரு நாள அடைப்பு ஒரே இடத்தில் நிலையாக இருப்பதன் காரணமாக, பெரு நாளங்களின் விட்டம் குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுதலினால் மைய நரம்பு மண்டலத்தின் குறிபிட்டப் பகுதிக்கு இரத்தம் சென்று சேராமை.
Thrombotic CVA - மைய நரம்பு மண்டலத்தைச் சார்ந்தப் பெரு நாள அடைப்பின் மேற்புறம், தட்டணுக்கள் மற்றும் பைப்ரின்களின் படிமத்தினால், இரத்தம் கட்டிக்கொண்டு இரத்த ஓட்டத்தை மேலும் தீவிரமாகத் தடுத்து உடலின் குறிபிட்டப் பகுதிக்கு இரத்தம் சென்று சேராமை.
Embolic CVA - இவ்வகையானது, இரத்த நாளங்கள் அல்லது கழுத்து இரத்த நாளங்களில் மேற்கூறிய த்ரோம்போடிக் எனப்படும் இதய நாள உட்புறக் கட்டியானது பெயர்ந்து இரத்த நாளங்கள் வழியே மைய நரம்பு மண்டலத்தைச் சென்றடைந்து அங்கு அடைத்துக் கொள்வதாகும். இவ்வடைப்பானது எங்கு எற்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரத்தன்மை மாறுபடும்.
Hemorrhagic CVA - பெருநாளச் சுவர் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. உள் அடுக்கு இன்டிமா (Intima) என்றும், நடுத்தர அடுக்கு மீடியா (Media) என்றும், வெளிப்புற அடுக்கு அட்வென்டீஷியா (Adventitia) என்றும் அழைக்கப்படுகிறது. பெருமூளை நாளங்களில் தீவிர அடைப்பு ஏற்பட்டு பெரு நாளச் சுவரின் மூன்று அடுக்குகளையும் பாதிப்படையச் செய்து அவ்வடுக்குகளில் பிளவு ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்படுதல்.
மேலே குறிப்பிட்ட பெருமூளை நாள விபத்து வகைகளில், த்ரோம்போடிக் மற்றும் எம்போலிக் வகைகளை, தீவிரமான மற்றும் இயல்பான இரத்த முடக்க பெருமூளை நாள விபத்துகள் (Ischemic CVA) எனலாம்.
3. புறப்பகுதி பெருநாள நோய்கள் (Peripheral Vessel Disease)
நீரிழிவு நோயினால் ஏற்படும் கொடூரமான பாதிப்புகளில் இதுவும் ஒன்று. இதனால் இடுப்புக்குக் கீழ் பகுதியில், குறிப்பாக கால் மற்றும் பாதங்களின் பெருநாளங்களில் மேற்குறிப்பிட்ட வகையில் இரத்த அடைப்புகள் ஏற்பட்டு, அதனால் கால் மற்றும் பாதங்களின் தசைகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாததினால், அத்தசைகள் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக பலச் சிக்கல்கள் ஏற்படலாம். இதன் விளைவாகவே, கால் மற்றும் பாதங்களின் ஒரு பகுதி அல்லது பெரும் பகுதியை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
4. நீரிழிவுச் சிறுநீரக பெருநாள நோய் (Diabetic Renal Vascular Disease)
சிறுநீரகத்திற்குச் செல்லும் பெருநாளங்களில் இதேபோன்ற அடைப்புகள் ஏற்படுவதின் விளைவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இன்ன பிற பாதிப்புகளும் பின்விளைவுகளையும் இந்நோய் ஏற்படுத்துகிறது. பொதுவாக சிறுநீரகத்தில் க்ளோமருலசின் சிறு நாளங்களிலேயே பாதிப்பு காணப்பட்டாலும், சிறுநீரகத் தமனியிலும் இது போன்ற அடைப்புகள் ஏற்படுவதுண்டு.
சிறு நாள நோய்கள் (Micro Vascular Diseases)
பெரு நாள நோய்களைப் போலவே, சிறு நாளங்களிலும் நீரிழிவு நோயினால் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், சிறுநாள நோய்கள், நீரிழிவு நோயினால் மட்டுமே எற்படுகின்றன. பெருநாள நோய்கள் நீரிழிவு காரணமாகவும் ஏற்படலாம் மற்ற காரணங்களினாலும் ஏற்படலாம். ஆனால் சிறு நாள நோய்கள் நீரிழிவினால் மட்டுமே ஏற்படும்.
உடலில் உள்ள திசுக்களுக்கு, குளுக்கோஸ் முதன்மை எரிபொருளாக உள்ளது. குளுக்கோஸ் மட்டுமே மூளைக்கான ஆற்றலின் அடிப்படை ஆகும். இயல்பான மூளைச் செயல்பாட்டை உறுதி செய்ய, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நிலையாகப் பராமரிக்க வேண்டி உள்ளது.
செல்கள் பயன்படுத்தும் ஆற்றலின் பெரும்பகுதி குளுக்கோஸிலிருந்து வருகிறது. · குளுக்கோஸை ஆற்றலாக மாற்றப் பயன்படுத்தப்படும் முதல் படிநிலை கிளைகோலிசிஸ் எனப்படுகிறது.
கிளைகோலிசிஸின் 3 முக்கிய படிநிலைகள்:
1. புரதம் மற்றும் உயிரணுக்களில் குளுக்கோஸ்
பிணைக்கப்பட்டு புரதம் உறுமாற்றமடைதல்.
2. ஆறு கார்பன் பிரக்டோஸின் பிளவு மூலம், மாற்றத்தக்க மூன்று கார்பன் மூலக்கூறுகள்
உருவாக்கப்படுதல்
3. ஏடிபி எனும் ஆற்றல் உருவாக்கப்படுதல்.
இவ்வாறாக கிளைகோலிஸ், ஆற்றல் உருவாக்கலில் முதன்மைப் பங்காற்றுகிறது.
நீரிழிவு நோயினால் ஏற்படும் பெருநாள நோய்கள், சிறுநாள நோய்கள், பெருந்தமனி தடிப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், அல்சைமர் நோய் போன்ற பல நோய்கள் மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் சில நோய்கள் உண்டாகுதலில், கிளைகோலிஸ் ஒரு உயிர் குறிப்பானாக (Bio-Marker) செயலாற்றுகிறது. புரத அமைப்புகள் மாற்றப்படுவதின் விளைவாக, ரத்த நாளங்களின் அடித்தள சவ்வு தடிமனாகி விடுகிறது.
குளுக்கோஸ் மற்றும் அதன் விளைப்பொருட்கள் அடித்தள சவ்வில் இருக்கும் புரதத்துடன் நொதியற்ற பிணைப்பை உண்டாக்குவதன் விளைவாக, புரதங்கள் மாற்றப்படுகின்றன. இவ்விளைவினால் அடித்தள சவ்வு தடிமனாவதோடு மட்டுமல்லாமல், விரிசலுற்று கசியத் துவங்குகிறது.
இதுபோன்று மாற்றியமைக்கப்பட்ட புரதம், மேம்பட்ட கிளைகேஷன் இறுதி விளைப்பொருட்கள் (Advanced Glycation End Products/AGEs) என்று அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இந்த மாற்றமானது மீளக்கூடியதாக (Reversible) உள்ளது. காலப்போக்கில் இம்மாற்றங்கள் மீள முடியாததாக மற்றும் மீளாத்தன்மையுடையதாகவும் நிலையானதாகவும் (Irreversible and Stable) மாறிவிடுகின்றன.
சிறுநாள நோய்களில் முதன்மையானவை கீழே தரப்பட்டுள்ளன :
நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy)
நீரிழிவு நோயினால் தோன்றும் சிக்கல்களில், நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) கொடியதாகும். இறுதியில் இந்நோய் குருட்டுத் தன்மையை உண்டாக்கும்.
இந் நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது:
1. அடிப்படையானது 2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy) 3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative) 4. பெருக்கம் தொடர்பானது (Proliferative)
விழித்திரையில், அடித்தள சவ்வுகள் தடிமனாகி, அதில் பல நுண்ணிய பிளவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பிளவுகளின் வழியாக கொழுப்புப் புரதங்கள் மற்றும் கொழுப்புப் பொருட்கள் அல்லது புரதங்கள் விழித்திரை நரம்புத் திசுக்களில் கசிந்து அதை சேதப்படுத்துகின்றன. அவை விழித்திரை இரத்தக்கசிவை கூட உருவாக்கலாம். இது போன்ற விழித்திரை இரத்தக் கசிவுகள் நீரிழிவு அல்லாத பிற காரணங்களாலும் உருவாகலாம். விழித்திரை நாளங்கள் மட்டுமே, ஆரோக்கியமான நபரிடம் நாம் நேரடியாகப் பார்க்கக் கூடிய நாளமாகும். நீரிழிவு நோயாளிகளிடையே இவற்றின் இயல்பற்ற நிலையைக் காண முடியும். மற்ற இரத்த நாள நோயைப் போலவே விழித்திரை நோயும் நீரிழிவு நோயாளிகளிடையே மிக விரைவாகப் பரவுகிறது. புது நாளங்கள் விழித்திரையில் உண்டாகின்றன. இது நீரிழிவுப் பெருக்க விழித்திரை நோய் எனப்படுகிறது. இந்நிலையில் இரத்தக் கசிவு மிகையாக ஏற்படுகிறது. இதனால் குருதியில் மட்டுமே இருக்கக் கூடியப் பொருட்கள் கசிந்து விழித்திரையின் நரம்புத்திசுக்களைப் பாதிப்படையச் செய்து பல சிக்கல்களை உண்டாக்குகிறது.
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களில் சிறிய புடைப்புக் காணப்படுகிறது. இதனால் இரத்த நாளங்களில் அழுத்தத்தினால் உடைந்து விழித்திரையின் மேல் குருதி பரவுகிறது. இக்குருதிக் கசிவு விழிப் பின்னறை நீர்மத்திலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீர்மத்தினுள் வளர்ச்சியுறலாம். லேசர் மருத்துவம் வாயிலாக இது சரி செய்யப்படுகிறது.
நீரிழிவுச் சிறுநீரக நோய் (Diabetic Nephropathy)
இந்நோய் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதம், பாதங்களில் வீக்கம் மற்றும் சிறுநீரக நோய்களை ஏற்படுத்துகிறது, இது பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.
இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்ட உங்கள் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில், அதிக உழைப்பின் விளைவாக அவை மோசமடையத் தொடங்குகின்றன. இதன் அறிகுறிகள் வெவ்வேறு நோயாளிகளுக்கு, அதன் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும். முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கினால், நீரிழிவு நெஃப்ரோபதி சிக்கல்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை வாழ்வதைத் தடுக்க எந்த காரணமும் இல்லை.
சிறுநீரகங்களின் சிறுநீரக நுண் துளை பந்துகளில் (Glomerulus) உள்ள நுண் குழல்களில் நாள நோய்கள் ஏற்படுவதின் மூலம் மற்றும் சிறுநீரகங்களில் காணப்படும் நுண்குழல்கள், நுண்துளை பந்து சவ்வு மற்றும் மெசஞ்சியம் செல்களில் கிளைகேஷன் இறுதி பொருட்களின் பெருக்கத்தினாலும் நீரிழிவு சிறுநீரக நோய் தீவிரமடைகிறது. நாள்பட்ட நிலையில் இந்நோய் தொடர்ந்து இருப்பதனால் சிறுநீரக செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் செயலிழக்கப் படுகின்றன.
நீரிழிவு நரம்பியல் நோய் (Diabetic Neuropathy)
நீரிழிவு நரம்பியல் நோய் என்பது நீரிழிவு நோயினால் இருந்தால் ஏற்படக்கூடிய ஒரு வகையான நரம்பு பாதிப்பு ஆகும். உயர் இரத்தச் சர்க்கரை (குளுக்கோஸ்) உடல் முழுவதும் நரம்புகளை காயப்படுத்தலாம். நீரிழிவு நரம்பியல் நோய், பெரும்பாலும் கால்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகளையே சேதப்படுத்துகிறது.
நீரிழிவு நரம்பியல் நோயில் நான்கு வகைகள் உள்ளன:
1. புற நரம்பியல் நோய் - (Peripheral Neuropathy)
(நீரிழிவு நரம்பு வலி என்றும், சேய்மை பாலிநியூரோபதி என்றும் அழைக்கப்படுகிறது)
2. அன்மை நரம்பியல் நோய் - (Proximal Neuropathy)
(நீரிழிவு அமியோட்ரோபி என்றும் அழைக்கப்படுகிறது)
3. தன்னியக்க நரம்பியல் நோய் - (Autonomic Neuropathy)
4. குவிய நரம்பியல் நோய் - (Focal Neuropathy)
பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் புற நரம்பியல் நோயே, நீரிழிவு நரம்பியல் நோயின் மிகவும் பொதுவான வடிவமாகும். இதனால் முதலில் கால்கள் மற்றும் பாதங்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தோள் மற்றும் கைகளில் இதன் தாக்கம் பரவுகிறது. உணர்வின்மை, குறிப்பாக கால்கள் மற்றும் கால் விரல்களில் வலி அல்லது வெப்பநிலையை உணரும் திறனில் ஏற்படும் மாற்றங்கள், ஆகியவையே புற நரம்பியல் நோயின் இயல்பான அறிகுறிகள் ஆகும்.
நிமிர் நிலைக் குருதி அழுத்தம் அல்லது ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் (Orthostatic Hypotension)
ஆர்த்தோஸ்டேடிக்
ஹைபோடென்ஷன் எனப்படும் நிமிர்நிலைக் குருதிஅழுத்தம், சிறுநாள நோயின் வகையே ஆகும். ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் அல்லது நிமிர்நிலைக்குறை குருதி அழுத்தம் என்பது நாம்
உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் இருந்து எழுந்து நிற்கும்போது
புவிஈர்ப்பு விசையின் விளைவாக, இரத்தம் நம் உடலின் கீழ்ப் பகுதிக்கு விரைந்து செல்லும். இதன் விளைவாக இரத்த
அழுத்தம் விரைவாகக் குறையும். இக்குறை இரத்த அழுத்தம் போஸ்டுரல் ஹைபோடென்ஷன் (Postural
Hypotension) என்றும்
அழைக்கப்படுகிறது. இச்சமயத்தில், பொதுவாக இதனால் தடுமாற்றம்
அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும். இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு, அனுதாப நரம்பு மண்டலத்தின் துணையோடு, கால்களில் உள்ள தசைகள் மற்றும் சிரைகளின்
சுருக்கத்தினால், இரத்தம் மீண்டும் மேலெழுப்பப்பட்டு, திடீர் குறை இரத்த அழுத்தம் உடனடியாக சரி
செய்யப்பட்டு விடுகிறது. நீரிழிவு நோயாளிகளின் கால் தசைகள் மற்றும்
கால் தசைகளின் பெருநாளங்கள் மேற்கூறிய பாதிப்பினால், செயலற்று, இயல்பாக செயலாற்றும் திறனை இழந்திருப்பதின்
விளைவாக, திடீர் குறை இரத்த அழுத்தத்தை சமன் செய்ய இயலாமல், நோயாளிக்குத் தடுமாற்றம் அல்லது மயக்கத்தை
ஏற்படுத்திக் கீழே விழச் செய்யும்.
No comments:
Post a Comment