இக்கட்டுரை நான்கு பகுதிகளைக் கொண்டது.
விவாதிக்கப்படவுள்ள தலைப்புகள்
பகுதி 1
நீரிழிவு நோயின் வரையறை
- இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் ஹார்மோன் தலையீட்டின் பங்கு
- வகைப்பாடு மற்றும் வகைகள்
- பல்வேறு வகையான நோய்க்குறியியல் அல்லது இரண்டாம் வகை டயாபடிஸ் மெலிட்டஸ் (Type II DM) இன் ஆபத்து காரணி
- தொற்றுநோயியல் (சுருக்கமாக)
- நோய் கண்டறிதல் மற்றும் வெளியிடல்
- இன்சுலின் உயிரியக்கவியல், சுரப்பு மற்றும் செயல்
- நோயாளியை அணுகுதல்
- வரலாறு மற்றும் உடல் பரிசோதனை
- ஆய்வக மதிப்பீடு
- மேலாண்மை மற்றும் சிகிச்சைகள் பகுதி 1
- பருவ வயது கடந்தவருக்கான டயாபடிஸ் மெலிட்டஸ் (DM) உடைய சிகிச்சை இலக்குகள்
- விரிவான நீரிழிவு மேலாண்மை கவனிப்பின் தற்போதைய அம்சங்கள்
- நீரிழிவுக் கல்வி
- உளவியல் சமூக அம்சங்கள்
- டயாபடிஸ் மெலிட்டஸ் (DM) இல் ஊட்டச்சத்து
நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
நீரிழிவு நோயின் தாக்கத்தினால், உலகளவில் கிட்டத்தட்ட 5-6 % மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். உலகளவில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் இறப்புகள் நேரடியாக நீரிழிவு நோயால் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக மிகுந்து வருகிறது.
நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோயாகும், இது இரத்த குளுக்கோஸின் (இரத்தச் சர்க்கரை) உயர்ந்த அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது, இது காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
டயாபடிஸ் இன்சிபிடஸ் (Diabetes Insipidus)
டயாபடிஸ் நோயின் மற்றொறு வகையான டயாபடிஸ் இன்சிபிடஸ் (Diabetes Insipidus) என்பது, மைய நரம்பு மண்டலத்தில் (Central Nervous System), குறிப்பாக ஹைப்போதாலமசில் ஏற்படும் மாறுபாட்டினால் எற்படும் மிகை சிறுநீர்ப் போக்கு நிலையாகும். நாம் இங்கு காண இருப்பது டயாபடிஸ் மெலிட்டஸ் (Diabetes Mellitus) எனும் வகையைக் குறித்தேயாகும்.
டயாபடிஸ் மெலிட்டஸ் (Diabetes Mellitus)
இரத்தத்தில் சர்க்கரையின் மாறுபாட்டினால், குறை இரத்தசர்க்கரை அளவு (Hypoglycemia) மற்றும் மிகை இரத்தச் சர்க்கரை அளவு (Hyperglycemia) எனும் நோய்கள் உண்டாகின்றன.
ஹைபர்கிளைசீமியா எனப்படும் மிகை இரத்தச் சர்க்கரை அளவு நோய் இரு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று இன்சுலின் குறைபாடு மற்றும் அதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி இருத்தல். மற்றொன்று உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலையினால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி இருத்தல். இதுவே வகை - 1 நீரிழிவு நோய் மற்றும் வகை - 2 நீரிழிவு நோய் எனப்படுகிறது.
இவ்விரண்டு வகைகளுள் மிகவும் பொதுவானது வகை - 2 நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக பெரியவர்களில், கணையம், போதுமான அளவு இன்சுலினை சுரந்த போதிலும், அவர்களின் உடல் இன்சுலினை எதிர்க்கும் நிலையில் உள்ள போது ஏற்படுகிறது. வகை - 1 நீரிழிவு நோய் இளம் வயதினரில், கணையம், போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில், அனைத்து வருமான நிலைகளில் உள்ள நாடுகளிலும், வகை - 2 நீரிழிவு நோயின் பாதிப்பு வியத்தகு அளவில் மிகுந்துள்ளது.
நீரிழிவு நோயின் சிக்கல்களால் பலர் இறக்கின்றனர். இந் நோயின்விளைவாக ஏற்படும் இணை நோய்களால், எடுத்துக்காட்டாக மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்ற பல நோய்களாலும் பலர் இறக்கின்றனர். நீரிழிவு நோய் என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. மாறாக, இது பல நோய்களின் தொகுப்பாகும்.
வகை 1 நீரிழிவு
வகை 1 நீரிழிவு நோயை ஒருபுறமும், வகை 2 நீரிழிவு நோயை மறுபுறமும் எடுத்துக் கொண்டால், இதன் இடையில் பல நிலைகள் காணப்படுகின்றன. வகை - 1 நீரிழிவு நோய் இளம் வயதினரில், தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறினால் (autoimmune disorder), கணையம், போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. பொதுவாக நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் உடலைத் தாக்கும் பொருட்களை அழித்து நம்மைக் காக்கிறது. இச் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறினால், நமது நோய் எதிர்ப்புச் சக்தியே நமது உடலை எதிர்க்கும் நிலையே தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறு (autoimmune disorder) என அழைக்கப்படுகிறது. இவ்விதமான தன்னுடல் நோயெதிர்ப்புக் கோளாறினால், கணையம், இன்சுலின் உற்பத்தி செய்யும் ஆற்றலை இழக்கிறது. இதன் விளைவாக வகை - 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
வகை - 2 நீரிழிவு
வகை - 2 நீரிழிவு நோயானது, பெரியவர்களில், கணையம், போதுமான அளவு இன்சுலினை சுரந்த போதிலும், அவர்களின் உடல் இன்சுலினை எதிர்க்கும் நிலையில் உள்ளதால், சுரக்கப்பட்ட இன்சுலின் பயனற்றுப் போய், வகை - 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 95 விழுக்காட்டினர், வகை - 2 நீரிழிவு நோயைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
மிகை இரத்தச் சர்க்கரை நோயின் பல்வேறு நிலைகள்
வகை - 1 நீரிழிவு பொதுவாக இளம் வயதினரிடமும், வகை - 2 நீரிழிவு வயதானவர்களிடமும் காணப்படுகிறது.
சில காரணங்களால், மிகச் சில இளம் வயதினரிடத்தில் வகை - 2 நீரிழிவை ஒத்த நிலையும், அதே போல், மிகச் சில வயதானவர்களிடத்தில் வகை-1 நீரிழிவை ஒத்த நிலையும் மாறிக் காணப்படுகிறது.
LATENT AUTOIMMUNE DIABETES OF ADULTS (LADA)
வயதானவர்களிடம் காணப்படும் வகை 1 நீரிழிவு ஒத்த நிலை LATENT AUTOIMMUNE DIABETES OF ADULTS (LADA) என அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு நிலைகளிலும் இன்சுலின் சுரப்புக் குறைபாட்டினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடுகிறது. ஆயினும் வகை 1 நீரிழிவு நோயானது இளம் வயதினரிடமும் LADA வகை நோயானது வயதானவர்களிடம் காணப்படுகிறது.
MATURITY ONSET DIABETES OF YOUNG PEOPLE (MODY)
மேற்கூறிய நிலையைப் போலவே இளம் வயதினரிடம் காணப்படும், வகை - 2 நீரிழிவு MATURITY ONSET DIABETES OF YOUNG PEOPLE (MODY) என அழைக்கப்படுகிறது. வகை - 2 நீரிழிவிற்கும், MODY வகை நீரிழிவிற்கும் ஒத்த பண்பு இன்சுலின் செயல்பாடின் குறைபாடாகும். ஆயினும் வகை 2 நீரிழிவு வயதானவர்களிடையே மட்டும் காணப்படுகிறது. மாறாக MODY வகை நீரிழிவு நோய் இளம் வயதினரிடையே காணப்படுகிறது.
பேறுகால நீரிழிவு (GESTATIONAL DIABETES)
இவ்வகை நீரழிவு பேறுகாலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படுவதாகும். இதைப் பற்றிய விரிவான விளக்கம் பின்வரும் பகுதியில் காணலாம்.
இரண்டாம் நிலை நீரிழிவு (SECONDARY DIABETES)
இவ்வகை நீரிழிவு உடலில் தோன்றும் மற்ற மாறுபாட்டினால், எடுத்துக்காட்டாக நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டின்மையால் ஏற்படும் கஷிங் குறைபாட்டினால் (Cushing Syndrome) இரத்தத்தில் கார்டிசால் ஹார்மோன்கள் எனப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் நாட்பட்ட நிலையில் மிகுந்து காணப்படுவதின் விளைவாக அல்லது இதய நோய்கள் மற்றும் இரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளும் தையசைடு (Thiazide), ப்ரொபனால் (Propanol) போன்ற மருந்துகள் பீட்டா தடுப்பான்களாகச் (Beta Blockers) செயல்பட்டு, அதன் விளைவாகவும் இரத்தத்தில் ஏற்படும் மிகை சர்க்கரை அளவினால் உண்டாவதாகும்.
இவ்வாறாக, மிகை இரத்தச் சர்க்கரை அளவு நோயை, இன்சுலின் சுரப்புக் குறைபாட்டு நிலை மற்றும் இன்சுலின் செயல்பாட்டுக் குறைபாட்டு நிலைகளுக்கிடையே அமைந்திருக்கும், பல்வேறு நிலைகள் எனும் பலவிதமான மரணக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு கொடூரமான பாசக்கயிறு எனக் கூறலாம்.
பெருநாள நோய்கள் மற்றும் சிறு நாள நோய்கள்
மாவு பொருட்களாகிய கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்தையும், புரதங்களின் வளர்சிதை மாற்றத்தையும், கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றங்களையும் நீரிழிவு நோய் பாதிக்கின்றது. இவ் வளர்சிதை மாற்றங்களைப் பின் வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம். இதனுடன் இந்நோய், இரத்த நாளங்களையும் பாதிப்படையச் செய்கின்றது.
நீரிழிவு
நோயை, சிலர், நாள நோய்கள்(Vascular Disease) எனக் கூறுவதுண்டு. நீரிழிவு நோய் பெரு நாளங்களில் தாக்கத்தை
ஏற்படுத்தி பெருநாள
நோயை(Macro Vascular Disease) உண்டாக்குகிறது. சில நேரங்களில் சிறுநாளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி சிறு நாள நோயை (Micro
Vascular Disease) உண்டாக்குவதும்
உண்டு. இவ்விரண்டு
நிலையிலும் அதன் செயல்பாடுகள் மாறுபட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக
அடுத்தப் பதிவில்
பெருநாள மற்றும் சிறு நாள நோய்களைப் பற்றிக் காணலாம்.
No comments:
Post a Comment